Search This Blog

Tuesday, March 29, 2011

வில்லனுக்கு ஓட்டு போடுங்க




தமிழக மக்களே இது உங்கள் அரசு.அரசு என்பது நாம் தான்.நாம் நம் குடும்பத்தை நிறுவகிப்பதை போல் அதை நிறுவகிக்க வேண்டும்.இங்கு உள்ள முதலீடு அனைத்தும் நம் பணம்.எனவே நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து நம் முதலீடுகளை காப்பாற்றிக் கொள்வோம்.நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் இலவசமாக தருவேன் என்பது அனைத்தும் நம் பணமே.நாம் வரியாக செலுத்தும் பணம்,முறையாக நம் முன்னேற்றத்திற்கு பயன்பட இலவசம் அனைத்தையும் உதரி தள்ளுங்கள்.உலகில் யாரும் யாருக்காகவும் இலவசமாக எதுவும் கொடுக்க மாட்டார்கள்.உலகில் எந்த பொருளும் இலவசமாக கிடைக்கவும் செய்யாது.ஆகவே மக்களே உணருங்கள்.உணர்ந்து செயல்படுங்கள்.இலவசம் என்று கூப்பாடு போடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

மக்களே சிந்தனை செய்துப் பாருங்கள் ,இந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை கீழ் உள்ளவாறு இருந்திருந்தால்.........

இதோ தமிழ் மக்களுக்காக என் 'வில்லன்' தேர்தல் அறிக்கை.


1. கல்வித் துறை மேம்படுத்தப்படும்.
  1. தற்போது நிலுவையிலுள்ள அனைத்து இலவச பஸ் பாஸ்கள் ரத்து செய்யபடும்.
  2. மக்கள்தொகைக்கேற்ற படி 5-6 ஊர்களுக்கு மத்தியில் அரசு பள்ளிகள் அமைக்கப்படும்.
  3. ஊருக்கு அருகாமையிலுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அப்பள்ளிகளுக்கு செல்வதற்கு மட்டும் பஸ் பாஸ் வழங்கப்படும்.
  4. பள்ளிகளில்  ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வியும் அரசியல் மற்றும் சட்டக்கல்வியும் பயிற்றுவிக்கப்படும்.
  5. மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்ய பயிற்றுவிக்கபடும்.
  6. பள்ளிகளில் மாணவர்களால் செய்யபட்ட கைவினை பொருட்கள் கொள்முதல் செய்யபட்டு விற்பனை நிலையமும் அமைக்கப்படும்.
  7. எல்லா பள்ளிகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப படும்.
  8. எல்லா கல்லூரிகளும் படிப்படியாக அரசுடமையாக்கப்படும்.
  9. எல்லா இட ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்படும்.
  10. உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
2. விவசாய துறை மேம்படுத்தப்படும்.
  1. எல்லா பாசனக்கால்வாய்களும் தூர்வாரப்பட்டு சீரமைக்கபடும்.
  2. பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றியமைக்க அனுமதிக்கபடாது.
  3. குளங்களும் ஏரிகளும் தூர்வாரப் படும்.
  4. பயிரிடப்படும் விவசாய பயிர்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.
  5. பதிவு செயியப்பட்ட பயிர்கள் அனைத்துக்கும் மானிய சலுகையில் இயற்கை சீற்றங்களுக்கான  காப்பீடு வழங்கப்படும்.
  6. எல்லா விவசாய பயிர்களுக்கும் குறைந்த விலை நிர்ணயிக்கப்படும்.
  7. பாசனப்பகுதியில் நீண்டக்கால பயிர் பயிரிட அரசிடம் முன் அனுமதிப்பெற வேண்டும்.
3. தொழிற்துறை மேம்படுத்தப்படும்.
  1. எல்லா மாவட்டங்களிலும் அதிகமான தரிசு நிலங்கள் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
  2. எல்லா தொழிற்பேட்டைகளிலும் பொதுத்துறை நிறுவங்கள் தொடங்கப்படும்.
  3. உத்தேசிக்கப்படும் பொதுத்துறை நிறுவங்கள்
     1. கட்டுமான நிறுவனம்
     2. கைபேசி தயாரிப்பு நிறுவனம்
     3. சிமண்டு
     4. மிண்ணணு நிறுவனம்.
     5. பி.பி.ஓ
     6. தமிழக அரசு கைபேசி சேவை நிறுவனம்
     7. தயார் ஆடை தயாரிப்பு நிறுவனம்.
     8. மின்சார உற்பத்தி நிறுவனம்
  4. தொழிற்பேட்டைகளில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறுவ தனியாருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
  5. ஒரே கிளையில் இருநூறு பேருக்கு மேல் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
4. விலைவாசி கட்டுப்படுத்தப்படும்.
  1. எல்லா உணவு பயிர்களுக்கும் குறைந்த விலை நிர்ணயம் செய்தது போல் உயர்ந்த விற்பனை விலையும் நிர்ணயிக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
  2. உள் நாட்டு உபயோகம் போக மீதமுள்ள பொருட்களே வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.
  3. சரக்குந்திற்கான டீசலின் மாநில விற்பனை வரி குறைக்கப்படும்.
5. சாலைப் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
  1. மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் முன் கண்டு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அமைக்கப்படும்.
  2. அனைத்து பொக்குவரத்து அலுவலகங்களும் கணிணி மயமாக்கப்படும்.
  3. சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  4. போக்குவரத்து துறையில் புதிய காவலர்கள் பணியமர்த்தப்படுவர்.
  5. எல்லா விபத்துக்களும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
  6. காவலர் விபத்து பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு விபத்திற்கான இழப்பீடு வழங்கப்படாது, மேலும் வாகன பணி சீரமைப்பு செய்ய         அனுமதிக்கப்படாது.
  7. எல்லா முக்கிய சாலைகளும் நாங்கு வழி சாலையாக மாற்றி அமைக்கப்படும்.
6.  சொகுசு வாகனங்களின் விற்பனை வரி உயர்த்தப்படும்
7.  மிதிவண்டிகான விற்பனை வரி ரத்து செய்யப்படும்.
8.  அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்பட்டு , மிக சரியான சமய அட்டவணையில் இயக்கபடும்.
9.  தனியாருக்கான எரிப்பொருளின் விற்பனை வரி உயர்த்தப்படும்.
10. ஆட்டோக்கள் அரசுடமையாக்கப்பட்டு,அரசால் நிறுவகிக்கப்படும்.
11. எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
12. எல்லா அரசு அலுவலகங்களும் கணிணி மயமாக்கப்படும்.

Monday, March 28, 2011

காட்டு புறாக்கூடு

நான் பணிபுரியும் கட்டடத்தின் மாடியில் ஒரு புறாகூடு கட்டியிருந்தது.அதன் புகைப்படத்தை கண்டு மகிழுங்கள்.


Sunday, March 27, 2011

என் நினைவு கோப்புகள் 3


அத்தியாயம் - 3
 எங்கள் வீட்டு சுற்றுபுறம்


எங்கள் வீடு தான் ஊரின் தென்மேற்கு பகுதியில் கடைசி வீடு.எங்கள் வீட்டை தாண்டினால் முழுவதும் வாழை மற்றும் வயக்காடு தான்.எங்கள் வீட்டிற்கு வரும் சாலை மண் சாலை தான்,ஏன் எங்கள் ஊரில் அப்போது தார் சாலைகளே கிடையாது.எங்கள் ஊரிலுள்ள எல்லா சாலைகளின் இருமருங்கும் நீரோடைகள் செல்லும்.எங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் தான் சாலை.அதன் எதிர்பக்கம் 'தாடிகாரர் விளை'.அது ஒரு தரிசு நிலம் எனலாம்.தோராயமாக 3 ஏக்கர் இருக்கும் ,இதன் பிரத்தியேகம் என்னவென்றால் நடுப்பகுதி முழுவதும் காலி நிலம் இடையிடையே அங்கொன்று இங்கொற்றுமாக பனைமரம் இருக்கும்.அதன் நாங்கு சுற்றுப்புறமும் தென்னை,மா,பூசரி,கொய்யா முதலிய மரமிருக்கும்.வீட்டின் வடக்கு பக்கம் 'சுண்டபற்றிவிளை தாத்தாவின் நிலம்',அதனுள் ஒரு தீப்பெட்டி மரமுண்டு.இந்த நிலத்தை பின்னர் நாங்கள் வாங்கி எங்கள் வீட்டுமனையுடன் சேர்த்து விட்டோம்.வீட்டின் மேற்கு பக்கம் காமராஜ் அவர்களின் நிலமும் ,கிழக்கு பக்கம் கண்ணாடிகாரர்,வைகுண்டம் அவர்களின் நிலமும் இருந்தன.
தாடிக்காரரின் தோப்பிற்கு கிழக்காலே 'மலேயகாரர்' மகன் மூத்தவர் 'ராபின்' வீடும்,அதன் கிழக்காலே 'மலேயகாரர்' வீடும் இருந்தன.அதன் எதிர்புரம் 'கணக்காபிள்ளை'யின் வீடு இருந்தது.எங்கள் ஊரில் மலேயகாரர் வீடு தான் பெரிய வீடு,அவர்கள் மலேசியாவில் இருந்து இங்கு குடி பெயர்ந்ததால் 'மலேயகாரர்' என்றழைக்கபட்டார்.

Saturday, March 26, 2011

என் நினைவு கோப்புகள்


அத்தியாயம் - 2
 எங்கள் வீட்டு தோப்பு

எங்கள் வீடு ஒரு தென்னை மர தோப்பிற்குள் இருந்தது.தென்னை மட்டுமல்லாது மா,பலா,பனை,மாதுளம்,எலும்மிச்சை மற்றும் பூஞ்செடிகளும்  உண்டு.தென்னந்தொப்பு என்றாலும் எல்லாம் சிறிய கன்றுகளாவே இருந்தன, பலன் கொடுக்கும் நிலையில் அஞ்சரணமே (ஐந்து ஆறு) இருந்தன.வீட்டு முற்றத்தின் இடது ஓரம் ஒரு 'கலந்த பனை மரம்' (ஆண் பனை) உண்டு. வைக்கோல் படப்பு மற்றும் மாட்டு தொழுவதின் இடையில் ஒரு கொல்லாமாவும் , அதன் வலகிழக்கு வசமாக ஒரு சிறிய பிலாமரகன்றும் (பலா) உண்டு.கொல்லாமாவு இரண்டு கிளைகளை உடையது.இரண்டு கிளையிலும் வெவ்வேறு சுவையுடைய பழம் காய்க்கும்.பொதுவாக எங்கள் பகுதியில் கொல்லாம்பழம் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திலே இருக்கும்,ஆனால் எங்கள் வீட்டு கொல்லாம்பழத்தின் நிறம் வெள்ளை நிறத்தில் சிறிய மஞ்சள் பூசினாற் போல் இருக்கும்,அதன் சுவையும் நல்ல மதுரமாக (இனிப்பாக) இருக்கும்.ஆனால் ஒரு பிரச்சனையுண்டு ,பழமும் கொட்டையும் சிறிதாகவும் இருக்கும் மற்றும் அதிகமாகவும் காய்காது.
அடுத்து எங்கள் தோப்பில் பிரதான இடம் பிடித்தது , வீட்டின் தென்மேற்கு மூலையிலுருந்த பிலாவு (பலா).இதுவும் இரண்டு பிரதான கிளைகளையுடையது.இது எண்ணிக்கையில் நிறைய காய்க்கும் ஆனால் சிறிதாகவும் நிறைய மெக்காகவும் பலாசுளை ரெம்ப கம்மியாகவும் இருக்கும்.ஆனால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.பலாசுளையினுள் இருக்கும் நீரின் சுவையும் அற்புதமாக இருக்கும்.இந்த சக்கை பழத்திக்கு (பலா பழத்திற்கு) எங்கள் ஊரில் எல்லா அறுவடையிலும் முன்பதிவு செய்வார்கள்,நாங்கள் எங்கள் சொந்தங்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு கொடுத்தது போக மீதி உள்ளதே விற்போம்.இந்த பிலாவு இல்லாது மேலும் வீட்டிற்கு வடகிழக்காக இரண்டும் தென்கிழக்காக ஒன்றுமாக மூன்று பிலாவு உண்டு, ஆனால் அவைகளின் சுவை அத்தனை பிரதானம் இல்லை.
வீட்டின் முதல் வாதலுக்கு (வாசல்) நேரே கிழக்காலே ஒரு சிறிய பச்சைனி வகை மாங்காமாவு,இதன் காயும் பழமும் நல்ல தேன் போன்ற தித்திப்பு சுவையுடையது.இதன் வடகிழக்காக ஒரு பெரிய மாங்காமாவு,இது பயங்கர புளிப்பு.இதன் காயை கறிக்கும் பச்சைனி மாங்காயை பழத்திர்க்கும் பயன்படுதுவோம்.இவ்விரண்டு மாமரங்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஒரு ஒட்டு எலுமிச்சை புதர் படர்ந்து கிடக்கும், ஒரு கிரிக்கட் பந்து அளவிற்கு  இருக்கும் இதன் காய் கொத்திற்கு இரண்டு மூன்றாக காய்க்கும். வீட்டிற்கு வடமேற்காக ஒரு நாட்டு மாதுளம் செடியுண்டு,இதன் விதை கடினமாக இருந்ததினால் அத்தனை விருப்பமில்லை.வைக்கோல் படப்பிற்கு வடகிழக்காக ஒரு படர்ந்த பூசரி மரமுண்டு ,இதில் தான் சாயுங்காலமானால் கோழி அடையும்.வீட்டின் மேற்கு பக்கம் ஒரு அரண் போல வரிசையாக 10 கமுகு மரமும் உண்டு.
பூஞ்செடிகளின் முதல் இடத்தில் முற்றத்தின் கிழக்காலே எலுமிச்சை வரை படர்ந்து கிடந்த மல்லிகை.எங்கள் ஊரிலே எல்லார் வீட்டு விசேசங்களுக்கும் வந்து பறித்து செல்வார்கள்.இன்று எங்கள் ஊரில் உள்ள அனைத்து மல்லிகைக்கும் முன்னோர் தேடினால் அது கடைசியில் எங்க்கள் மல்லிகையிலேயே வந்து நிற்க்கும்.தென்னை மரத்தை எடுத்து கொண்டால் ரோட்டோரம் மேற்கிலிருந்து ஐந்தாவது மரம் தான் எல்லாருக்கும் பிடித்தது.அதன் தேங்காய் அத்தனை சுவையாக இருக்கும்.தென்னங்கன்று பாவுவதற்கு இதில் இருந்து மூத்த குலையில் இருந்து எடுத்து விட்டு ,மீதமுள்ளதை கறி தேங்காயாக எடுத்து விடுவார்கள்.
மல்லிகை அல்லாது ஒரு சிவந்த ரோஜா,பிச்சி, ஆகியனவும் எங்கள் தோப்பில் இருந்தன.
இது மட்டுமல்லாது களைசெடிகளாக குப்பை கீரை,குப்பைமேனி,வல்லாரை,காயத்திருமேனி,அருகம்புல்,நாயுருவி முதலியனவும் தோப்பு எங்கும் வியாபித்திருக்கும்.இவை எல்லாவற்றையும் விட தோப்பில் எப்பொதும் தண்ணீர் ஊற்றெடுத்து ஒழுகி கொண்டிருக்கும்.
அடுத்த பதிவில் எங்கள் தோப்பின் சுற்றுவட்டம்.

Friday, March 25, 2011

என் நினைவு கோப்புகள்


நாளை என் இருபத்தி எட்டு வயது நிறைவடைந்து இருபத்தி ஒன்பதாம் அகவையில் காலடி வைக்கின்றேன்.இது வரை கடந்து வந்த பதையை வலைபதிவில் பதிக்கலாம் என்று ஒரு அவா. நாளை  என் வரலாற்றை தேடி யாரும் சிரம படகூடாது என்று ,என் நினைவுகளை ஒரு தொடராக பதிவுலகில் பதிக்கின்றேன்.யார் அறிவார் நானும் நாளை ஒரு பிரபலம் ஆகலாம்.
இதில் என் நினைவில் உள்ள சுக துக்க சம்பவங்களும், எங்கள் ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டம் முழுவதும் காலபோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பதிவு செய்யவுள்ளேன்.இது என்பதுகளில் இருந்து தொடங்கும்.முதல் அத்தியாயமாக என் நினைவில் உள்ள எங்கள் பழைய வீடு .
அத்தியாயம் - 1

எங்கள் வீடு என்பதுகளில்.

எங்கள் வீடு கிழக்கு திசை நோக்கியது. எங்கள் வீடு இருபது அடி உயரம் கொண்ட ஓட்டு கூரை கொண்ட வீடு. எங்கள் வீடு இரண்டு முறிகள் கொண்டது,அதாவது இரண்டு வீடுகள் சேர்ந்து ஒன்றானது.முன்புறம் இரண்டு படிகட்டுகள் நேராக முறிகளின் கதவிற்கு நேராக இருக்கும்.இடபுற படிகட்டில் ஏறிய உடன் இடது ஓரமாக ஒரு சிறிய அறை, வலதுபுறம் திண்ணை. வலபுற படிகட்டில் ஏறிய உடன் வலது ஓரமாக ஒரு சிறிய அறை. இவை இரண்டையும் இணைத்த மாதிரி நீண்ட திண்ணை,அதன் நடுவில் வகிடெடுத்த மாதிரி ஒரு சுவர்,அதன் நடுவில் ஒரு வாசலும் உண்டு.இரண்டு திண்ணையிலும் தலா ஒரு பெஞ்சும் ஒரு நாற்காலியும் போடபட்டிருக்கும். இனி முறிகளை பற்றி பார்ப்போம்.வாசல் கதவை திறந்தவுடன் 'மங்களாவு' இங்கு தான் உறங்குமிடம். இதன் இடபுறம் 'அரங்கு' இது பூசை அறை மற்றும் பெட்டக அறை எனலாம். மங்களாவில் இருந்து நேராக அடுத்து 'அடுக்களை' அதன் இடபுறம் தானிய வகை வைக்கும் அறை.அடுக்களையின் நேராக பின்பக்க வாசல்.இதன் பிம்பமாக அடுத்த முறி இருக்கும்.வீட்டின் பின்புறம் ஓலையால் வேயபட்ட வெளிபுற அடுக்களை உண்டு.வீட்டின் வலது ஓரம் பெரிய மாட்டு தொழுவமும் அதன் முன்புறம் பெரிய வைக்கோல் படப்பும் உண்டு.வைக்கோல் படப்பிலிருந்து வீட்டின் இடது ஓரம் வரை விரிந்த பெரிய முற்றம்.வீட்டின் முன்புறம் சரியாக நடுவில் ஒரு முல்லை செடி ஓங்கி ஓட்டின் மீது படர்ந்து கிடக்கும்.

எங்கள் வீட்டு தோப்பு பற்றி அடுத்த பதிவில்.